07 November 2013

தமிழருக்கான அரசியலின் அடிப்படை

அரசியல் அடிப்படை
குறிப்பு: தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் போல, இந்த 'அரசியல் அடிப்படை' என்ற கருவியை உங்கள் முன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' வைக்கிறது. இது புது கருத்து ஒன்றும் இல்லை. ஏற்க்கனவே பலருக்கு தெரிந்தது தான். ஆனால், பொது வாழ்க்கையில் நுழைய விரும்பும் எவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை இவை என்பதால் விரிவாக பகிர்கிறோம். இந்த கருவியை கொண்டு உலக அளவில் நடக்கும் அரசியலை நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டும் இன்றி, இங்கே குறிப்பாக தமிழர் அரசியல், ஈழத்தமிழர் அரசியல் என்று அரசியல் செய்வோர்கள் நல்லவர்களா, தீயவர்களா,அப்பாவிகள் என்றும் உங்களால் கணிக்க முடியும். மேலும் நமக்கான அரசியல் பாதை என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்றும், இருக்கிறது என்றால் எது, இல்லை என்றால் எப்படி உருவாக்குவது என்றும் இந்த கட்டுரை ஒரு சிறு வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறோம்.



பொதுவாக நாகரிக மனித சமூகத்தை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். (குறிப்பு: இவை பொருளாதாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து அளக்கப்படுவது இல்லை. சமூக பங்களிப்பு என்பதை பொறுத்தவை இந்த வர்க்கங்கள்.).

1. அதிகார வர்க்கம்  (சுமார் 2%)

2. நடுத்தர வர்க்கம் (சுமார் 60-75%)

3. பாட்டாளி வர்க்கம் (சுமார் 25-30%)



பாட்டாளி வர்க்கத்தின் குணநலன்
> அப்பாவிகள், எளிதில் ஏமாறுபவர்கள்/ஏமாற்றப்படுபவர்கள்
> அன்றாடம் காய்ச்சிகள்
> அடிமட்ட அரசியல் தொண்டர்கள்
> சதுரங்கத்தில் சிப்பாய்கள் போல களம் இறக்கப்படுபவர்கள்,முதலில் களப்பலி ஆகுபவர்கள்
> அதிகார வர்கத்தால் பயன்படுத்தப்படுபவர்கள்.
> தொலைநோக்கு சிந்தனையோ, அரசியல் அறிவோ, தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளையோ அறிந்து வைத்திருக்காத பாமரர்கள்
> புரட்சியையோ, கிளர்ச்சியையோ,சமுதாய மாற்றமோ நடை பெற வேண்டும் என்றால் கூட இவர்களால் தன்னிச்சையாக செய்ய முடியாது. அதற்க்கும் இவர்கள் நம்பி இருப்பது அதிகார வர்க்கத்தை தான்.

நடுத்தர வர்கத்தின் குணநலன்
> காய்ச்சல் வருவதற்கு முன்பு மருந்து சாப்பிடும் பொதுமக்கள்.
> கருத்தியலை பின்பற்றுபவர்கள். அந்த கருத்தியல் உம் (திராவிடம்,இந்து மதம், சாக்கியம்) போல எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை பின்பற்ற மட்டுமே செய்யும்
> தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்கள்.
> அதிகார வர்க்கத்தால் மறைமுகமாக பாதிக்கப்படுபவர்கள்.
> அதிகார வர்க்கம் என்ன கெடுதல் செய்தாலும் அதை தாங்கி அதற்க்கு தகுந்த மாதிரி வாழப்பழகியவர்கள்.
> கிளர்ச்சி,புரட்சி,சமூக சிந்தனை,மாற்றம் என்று எதை பற்றியும் அலட்டிகொள்லாதவர்கள்.
> இவர்களால் அதிகார வர்க்கத்துக்கு எந்த காலத்திலும் பாதிப்பு இல்லை.

அதிகார வர்க்கம்
> இந்த 2% மட்டுமே உள்ள இவர்கள் தான் மீதம் இருக்கும் 98% நடுத்தர வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 98% மக்கள் உயிர் வாழ வேண்டுமா வேண்டாம் என்பதை கூட இந்த 2% அதிகார வர்க்கமே முடிவு செய்யும்.
> ஒட்டுமொத்த உலக அரசியலிலும் இந்த 2% அதிகார வர்க்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் தான் இந்த உலகத்தின் தலை எழுத்தையே தீர்மானிக்கிறது.
> இந்த அதிகார வர்கத்தில், கீழ்க்கண்ட வகையான நபர்கள் உள்ளனர்.

* கருத்தியலை உருவாக்குபவர்கள்
* அந்த கருத்தியலை வலுவாக அடியொற்றி அரசியல் செய்பவர்கள்
* முதலாளிகள், தொழில் வல்லுனர்கள்
* மக்கள் வெகுஜன ஊடக உரிமையாளர்கள்
* கொள்கை வகுப்பாளர்கள்
* பரவலாக அறியப்பட்ட அறிவுஜீவிகள்
etc....

எனவே "பொதுவாழ்வில் 98% மக்களுக்கு பயனளிக்கும் வகையில் யார் யாரெல்லாம் செயல்பட நினைக்கிறார்களோ, அவர்களின் இலக்கு அதிகார வர்கத்தில் இடம் பிடிக்க முயற்சிப்பதே" ஆகும். மற்றபடி வேறெந்த வர்கத்தை குறிவைத்து நாம் நகர்ந்தாலும், அந்த போராட்டமும், முயற்சியும் அப்போதைக்கு தீர்வாக இருக்கலாமே ஒழிய, நிரந்தர தீர்வாக இருக்காது. இந்த அடிப்படை உண்மையை உள்வாங்கி கொண்டு, அதிகார வர்க்கத்தை இன்னும் சற்று நுணுக்கமாக அலசுவோம்.

அதிகார வர்கத்தில் இருக்கும் அனைவருமே நல்லவர்களும் அல்ல, கெட்டவர்களும்அல்ல.
=> அதிகார வர்கத்தில் உள்ள 90% பேர் கிரிமினல்களே.....!!! இந்த கணக்கு எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டில் உள்ள சமூக கட்டமைப்புக்கும் பொருந்தும்
=> மீதம் உள்ள வெறும் 10% பேர் மட்டுமே மற்ற அனைவரை காட்டிலும் நேர்மையானவர்கள். இந்த 10 சதவீத அதிகார வர்க்கத்தால் தான், இன்றும் உலகம் உருப்படியாக இயங்கி கொண்டு இருக்கிறது.

எப்போதெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட 10% பேரின் கை ஓங்கி, மீதம் உள்ள 90% அதிகார வரகத்தின் கையை விட ஓங்கி இருக்கிறதோ அந்த காலம் தான் வரலாற்றில் பொற்காலம் என்றும், அந்த ஆட்சியையே நல்லாட்சி என்றும் காலம் பதிவு செய்கிறது. 

நிற்க. ஆக தமிழருக்கு தலைமை தாங்க நினைக்கும் எந்த ஒரு தலைமையும்,அமைப்பும் செய்ய வேண்டியது இவையே.

> அதிகார மையத்தை நோக்கியதாக தங்கள் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
> 10% அதிகார மையத்தில் உண்மையானவர்களாக இருப்பதோடு மட்டும் இன்றி, மீதம் உள்ள 90% சதவீத கிரிமினல் அதிகார வர்க்கத்தை இராஜதந்திர காய் நகர்த்தல்களின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கவும் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சரி. தமிழருக்கு தலைமை தாங்க நினைக்க எவரும் அந்த 10% அதிகார மையத்தில் இடம் பிடிப்பது எல்லாம் சரி. அதை யார் செய்வது எப்படி செய்வது?. அதை பார்க்கும் முன்பு, ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் உலக வரலாற்றில் எப்படி தங்கள் இலக்கை அடைய காய் நகர்த்தினார்கள் என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

1.அதிகார வர்க்கம் கருத்தியலை உருவாக்கும்
2.அந்த கருத்தியலை பரப்புரை செய்யும்
3.அந்த கருத்தியல் ஒட்டி, பாட்டாளி வர்க்கத்தை தனக்கு தேவையானபடி ஒருங்கிணைத்து பயன்படுத்திக் கொள்ளும்.

உதாரணம்#1: (கிரிமினல் அதிகார வர்க்க சிந்தனை)
1.மாக்ஸ் முல்லர் ஆரிய கருத்தியலை உருவாக்குகிறார்.
2.அதை அவர் தொட்டு பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.அந்த ஆரிய கருத்தியலை ஒட்டி பிராமணர்கள்,இந்து மதத்தையும் இந்தியாவையும் கட்டி எழுப்புகின்றனர்.பாட்டாளி வர்க்கத்தை 'இந்து' மடத்தை காக்க பயன்படுத்துகின்றனர்.

அப்படி என்றால் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் செய்ய வேண்டியது 'பிராமணாள் கபே'வை உடைப்பது அல்ல. மாக்ஸ் முல்லரை, அவரின் ஆரிய கருத்தியலை உடைக்க வேண்டும்.

உதாரணம்#2 (மக்களுக்கான சிந்தனை)
1.புத்தர் 'ஒடுக்கப்பட்டோருக்கான மீட்சி' என்ற கருத்தியலை உருவாக்குகிறார். அதனை ஒட்டி 'புத்த மதம்' தோற்றுவிக்கப்படுகிறது.
2.அதை பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.பின்பு புத்தமதம் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து, கிளர்ந்து வளர்ந்தது.

அப்படி என்றால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க நாம் செய்ய வேண்டியது இவை தான். இதற்க்கு சற்று காலம் பிடிக்கும். ஆனால் கண்டிப்பான வெற்றியை இனி வரும் அனைத்து தலைமுறைக்கும் தரும் என்று நம்புகிறோம்.

1. தமிழருக்கான கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும். அந்த கருத்தியலில் யார் தமிழர், என்ன அவர்களின் தேவை என்பவை தெளிவாக குறிப்பிட பட வேண்டும். மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். (உம்: 'தமிழர் அரசு' என்பது தமிழருக்கான ஒரு கருத்தியல்).
2. தமிழருக்கான கருத்தியலுக்கு எதிர் கருத்தியல்கள், சிந்தனைகள் அனைத்தும் உடைக்கப்பட வேண்டும். (உம்: தலித்தியம்,திராவிடம்,ஆரியம்)
3. தமிழருக்கான கருத்தியல் பரப்புரை செய்யப்பட வேண்டும்.
4. மீதம் இருக்கும் 98% மக்களும் அவர்களை அறியாமலேயே இதை பின்பற்ற அவர்களாகவே தொடங்குவார்கள்.
5. அந்த கருத்தியலை ஒட்டி அரசியல் தொடங்கப்பட வேண்டும்.
6. அந்த அரசியல ஒட்டி களம் காணும்போது, கருத்தியலால் ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், தமிழருக்கான அதிகார வர்க்கத்துடன் கை கோர்த்து இலக்கை அடைய உதவும்.

தமிழருக்கான கருத்தியலை உருவாக்க,விவாதிக்க சக தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி